பேரிடருக்கு பின்னரான ஒரு திட்டமிடல் இல்லாவிட்டால் ஏப்ரல், மே மாதங்களில் இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ எதிர்வு கூறியுள்ளார்.
கொழும்பு பிலவர் வீதியில் அமைந்துள்ள, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் செயற்பாட்டு அலுவலகத்தில் இன்று (15.12.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
நாடு எதிர்கொள்ளப் போகும் நெருக்கடி
தொடர்ந்து பேசிய அவர்,
பேரிடரில் ஏற்பட்ட சேதம் குறித்து முறையான அறிக்கையை தாருங்கள். பதினெட்டு நாட்களாக சரியான தகவல்கள் இதுவரை இல்லை. எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோருகிறது.
ஆனால் 18 ஆம் திகதி குறைநிரப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுவதற்கே நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. நாட்டிற்கு நடந்த உண்மைகளைச் சொல்லத்தான் நாடாளுமன்றம் இருக்கிறது.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் கிறிஸ்மஸ் தாத்தாவாக பரிசுகள் தருவதாக கூறிவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றார். அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் பாதையையே ஏற்படுத்தியுள்ளார்.
இப்போது தான் யதார்த்தம் வெளிப்பட்டுள்ளது. 25,000 ரூபா கொடுப்பதும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள நட்ட ஈடுகளை எவ்வாறு செலுத்த போகிறீர்கள். முழுமையான பாதிப்பு தொடர்பில் இதுவரை எவ்வித கணிப்பீடுகளும் நடத்தப்படவில்லை.
ஊடகவியலாளர்களுக்குக் கூட சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
