Home இலங்கை அரசியல் அநுர அரசுக்கு சவால் விடும் நாடாளுமன்ற உறுப்பினர்!

அநுர அரசுக்கு சவால் விடும் நாடாளுமன்ற உறுப்பினர்!

0

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (06.12.2024) இடம்பெற்ற கணக்கு வாக்கு பணம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் “ஜனாதிபதி தமது கொள்கைப் பிரகடனத்தில் ‘சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டத்திலிருந்து விலகினால் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

தேர்தல் மேடை

இதுவே உண்மை. இதனையே நாங்களும் ஆரம்பத்திலிருந்து கூறி வருகின்றோம். சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர்த்துச் செயற்பட முடியாது.

எனினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில நிபந்தனைகள் மீள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் ஒன்றைக் கூறி விட்டு தற்போது நாடாளுமன்றத்துக்கு மற்றுமொரு விடயத்தைக் குறிப்பிடுகின்றது.

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் குறித்த உடன்படிக்கை இதுவரையில் கைச்சாத்திடப்படவில்லை.

அநுர அரசுக்கு சவால் 

டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை அதற்குக் கால அவகாசம் காணப்படுகின்றது. அவ்வாறு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்குமாயின் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு சவால் விடுக்கின்றோம்.

அரசாங்கத்துக்கு போதிய கால அவகாசம் காணப்படுகின்ற போதிலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சர்வதேச பிணை முறிகளில் இருந்து பெறப்பட்ட கடனில் பெருமளவானவை மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை. கணக்கிடல் பிரச்சினையே காணப்படுகின்றது. அவ்வாறு போலியான தகவலை முன்வைத்தே இந்த அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது.

எனினும் மோசடியாளர்கள் மற்றும் ஊழல்வாதிகளைக் கைது செய்வதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவுள்ளது ” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version