அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் மோதல்கள் குறையும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் மறுபக்கம் நடந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாகவே, ஜோ பைடன் போர் பதற்றத்தை இன்னும் அதிகரிக்க செய்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைனால் நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் கடுமையாக இருப்பதாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இலங்கையர்கள் உயிரிழப்பு
அத்தோடு, இந்த கடுமையான மோதல்களின் காரணமாக கடந்த சில நாட்களில் இலங்கையர்களின் குழு ஒன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குளிர் காரணமாக தற்போது பல இலங்கையர்கள் போர் முனையில் இருந்து அகற்றப்பட்டு சடலங்களை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
போர் முனையில் இல்லாவிட்டாலும், அது மிகவும் ஆபத்தான பணி என்றே குறிப்பிடப்படுகிறது.
இலங்கை இராணுவ வீரர்
நவம்பர் 20 அன்று டொனெட்ஸ்க் மாகாணத்தில் பதுங்கு குழியில் இருந்து இறந்த உடல்களை அகற்றிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் பதுங்கு குழியில் வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மற்றுமொரு இலங்கை இராணுவ வீரருக்கும் நவம்பர் 15ஆம் திகதி மொஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் ரஷ்ய இராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.