“எமது மண்ணையும், மக்களையும் ஆழமாக நேசித்து, இன விடுதலை என்ற சத்திய
இலட்சியத்துக்காகத் தம் உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தேசத்தின் வீரமறவர்களது
தியாகம் ஒருபோதும் வீண்போகாது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மாவீரர்களின் உயிர்க்கொடைக்கான விலையை, காலம்
எங்கள் கரங்களில் ஒருநாள் கையளித்தேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உருத்திரபுரம்
வட்டாரக் கிளையினரின் ஒழுங்கமைப்பில் அந்த வட்டாரத்துக்குட்பட்ட மாவீரர்களின்
பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று (23) நடைபெற்ற போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழ்த் தேசிய உணர்வு
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இனத்தின் வரலாற்றை, தம் இருப்பை நிலைநாட்டுவதற்காக எமது இனத்தின் புதல்வர்கள்
புரிந்திருக்கும் ஆகப் பெரும் தியாகத்தை, இந்தத் தலைமுறை உணர வேண்டும்.
ஈழத்தமிழர்களின் இருப்பு உறுதிபடும் என்பதை உணர்ந்தவர்களாக, மாவீரர்
மாண்பையும், அவர்களது பற்றுறுதிமிக்க தமிழ்த் தேசியக் கொள்கையையும், ஈழ
விடுதலைப் போரின் நியாயாதிக்கங்களையும் உணர்ந்த சமூகமாக எங்களின் இளையோரைப்
புடம்போடுவதே மாவீரர்களுக்கும், அவர்களை மடியீந்த பெற்றோருக்கும் நாங்கள்
செய்யும் மரியாதையாக இருக்கும்.
தங்கள் பிள்ளைகளை, இந்தத் தேசத்துக்காகத் தாரைவார்த்துக்கொடுத்த
பெற்றோர்களுக்கு, தமிழ்த் தேசிய உணர்வு சிதையாவண்ணம் எங்கள் சந்ததியைச்
செதுக்குவோம் என்ற உறுதியை வழங்குவதொன்றே நிறைவைத் தரும்” என்றார்.