பறவைக் கூண்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபருடன் 442 கிராம் 225 மில்லிகிராம் போதைப்பொருளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சந்தேகநபர், கொழும்பு 14 (Colombo 14), மாதம்பிட்டிய (Madampitiya) வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது, போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடம் தொடர்பில் கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் வத்தளை (Wattala) – ஹூனுபிட்டிய, சங்கராஜ மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் பின்னால் உள்ள பறவைக் கூண்டில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீண்ட விசாரணை
அதன்படி, சந்தேகநபருடன் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, பறவைக் கூண்டு பூட்டால் பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த சாவியை பெற்று, பறவைக் கூண்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, செலோ டேப்பால் ஒட்டப்பட்டிருந்த சிலிண்டர் போன்ற ஒன்று கிடைத்துள்ளது.
அதனை சோதனை செய்த போதே குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
46 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 07 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவினை பெற்று, இந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் மூளையாக செயல்படுபவர் குறித்த தகவல்களை வெளிக்கொணர்வதற்கு நீண்ட விசாரணை இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.