மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) சிறைச்சாலை வைத்தியரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அறிக்கை பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வெலிக்கடை மகளிர் சிறைச்சாலையின் ஆர் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, ஹிருணிகா பிரேமச்சந்திரவும் ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் ஆடையுடன் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறைச்சாலை திணைக்களம்
தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றம் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இதனடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஹிருணிகா 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதோடு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 20,000 ரூபா அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அபராத தொகை
அத்தோடு, அபராத தொகையைச் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மேலதிகமாக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதேவேளை ஹிருணிக்காவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.