கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளில் ஹோட்டல் ஊழியர்களால், வாடிக்கையாளர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
எனினும் உண்மையில் வாடிக்கையாளர்களால் கொடூரமான முறையில் ஊழியர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது தாக்குல் மேற்கொண்டதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் சம்பவத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஊழியர்கள் மீது தாக்குதல்
சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள், எங்கள் ஊழியர்கள் தாக்குவதினை மாத்திரம் காட்டுகின்றன, ஆனால் அதற்கு வழிவகுத்த நிகழ்வுகள் அதில் உள்ளடங்கவில்லை.
நவம்பர் 22 ஆம் திகதி மாலை, உணவகம் முழு கொள்ளளவுடன் இருந்தபோது, ஒரு குழுவினர் வருகை தந்து உணவினை ஓடர் செய்தனர். சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று பணியாளர் பணிவுடன் தெரிவித்தார்.
குறித்த குழுவினர் பல முறை ஹோட்டலுக்குள் வந்த போதும், அமருவதற்குரிய இடம் கிடைக்கவில்லை என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக திரும்பி வந்தபோது, உணவகம் அப்போதும் நிரம்பியிருந்ததால் அவர்களிடம் மீண்டும் கூறப்பட்டது.
இதன்போது, ஆத்திரமடைந்த குழுவினர் திடீரென எங்கள் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர்.
நான்கு ஊழியர்கள் காயமடைந்தனர், அதில் ஒருவருக்கு தலையில் காயம், மற்றொருவருக்கு விரல்கள் உடைந்தன. இருவர் இன்னும் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இனவாத அச்சுறுத்தல்
ஹோட்டல் டி பிளாசாவில், நாங்கள் எப்போதும் சூழ்நிலைகளை அமைதியாகவும், தொழில் ரீதியாகவும் நிர்வகிக்க முயற்சி செய்கிறோம்.
துரதிர்ஷ்டவசமாக, எங்கள் ஊழியர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்ட பின்னரே தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த காணொளியை பகிரும் போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த காட்சிகள் சம்பவத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுவதால், தேவையற்ற இன பதற்றத்தை உருவாக்கும் அபாயத்தை கொண்டுள்ளது.
இது தீங்கு விளைவிக்கும் மற்றும் தவறாக வழிநடத்தும்.
முடிவுகளை எடுப்பதற்கு முன் முழுமையான சூழலையும் கருத்தில் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து முழுமையாக ஒத்துழைக்கிறோம்.
மேலும் எங்கள் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பு எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
