வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று (25) முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென்,ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு அபாயம்
கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ இற்கு மேல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ இற்கு மேல் ஓரளவு கனமழை பெய்யக்கூடும்.
வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 40 கி.மீ வேகத்தில் இடைக்கிடையே ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.
மின்னல் தாக்கம்
அதிக மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (25) முதல் 30ஆம் திகதி வரையில் வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதால் முன்கூட்டிய எச்சரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
