சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து நாடாளுமன்றம் வந்தவர் இன்று வரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K. Ilankumaran) தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தால் யாழ்ப்பாணத்துக்கு பாதிப்பில்லை என்று குறிப்பிட்டு அந்த மக்களையே தூற்றித் திரிகிறார் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கோ அல்லது இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையோ பார்க்க யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தராது, அந்த மக்களை கைவிட்டு கொழும்பில் புலம்பெயர் தேசத்தின் பணத்தில் அதிசொகுசு மாடி வீட்டில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் புலம்பெயர் தேச உறவுகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும்.
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து நாடாளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை. அப்படிப்பட்டவர் தான் தற்போது யாழ்ப்பாணத்தில் எந்த பாதிப்பும் இல்லையென்று கூறுகின்றார்.
யாழ்ப்பாண மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இப்போது அந்த மக்களைத் தூற்றியும், கேவலப்படுத்தியும் திரிகின்றார். இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளோ, அவர்களின் நிகழ்ச்சி நிரல்களோ தெரியாது. இதன் பக்கவிளைவுகளை அவர் வெகுவிரைவில் உணருவார் ” என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/widfhO3jWzo
