நக்கிள்ஸ் பாதுகாப்பு வனப்பகுதிக்குள் இடம்பெறும் அனைத்துச் சட்டவிரோத காணி
அகற்றும் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளையும் உடனடியாக இடைநிறுத்தக் கோரி,
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வனப் பாதுகாவலர் நாயகத்திற்கு ஒரு கோரிக்கை
கடிதத்தை அனுப்பியுள்ளது.
அத்துடன், இந்தச் சட்டவிரோதச் செயல்களுக்கு அதிகாரமளித்த, வசதிசெய்த அல்லது
அனுமதித்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களை உடனடியாக அடையாளம் கண்டு,
பொறுப்பானவர்கள் மீது காலதாமதமின்றி பொருத்தமான ஒழுங்குமுறை மற்றும் சட்ட
நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம்
வலியுறுத்தியுள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் மத்திய
உயர்நிலப் பகுதிகளில் அமைந்துள்ள நக்கிள்ஸ் வனப்பகுதிக்குள், சுமார் 8
கிலோமீட்டர் நீளமுள்ள பாதையை அமைக்கும் சட்டவிரோத வீதி அபிவிருத்தித் திட்டம்
ஒன்று நடைபெறுவதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கை
அத்துடன், இந்த உத்தேசிக்கப்பட்ட பாதையின் பெரும்பகுதி சட்டப்பூர்வமாகப்
பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலத்திற்குள் அமைவதாகவும்
சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நக்கிள்ஸ் பிராந்தியம் வனப் பணிச்சட்டத்தின் கீழ் ஒரு பாதுகாக்கப்பட்ட
வனமாகவும், தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் ஒரு சுற்றுச்சூழல்
பாதுகாப்புப் பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு வீதி அமைத்தல்
அல்லது நிலத்தை அகற்றுவது ஆகியவை சட்டத்தை நேரடியாக மீறும் செயலாகும் எனவும்
மையம் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கைகளின் மீது வனப் பாதுகாவலர் நாயகம் செயல்படத் தவறினால், சட்ட
நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்படும் எனவும் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம்
எச்சரித்துள்ளது.
