யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் மண் அகழ்வு இடம்பெற்று
வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் கிழக்கு தாளையடி பகுதியில் அமைந்துள்ள கடல் நீரை
நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் பகுதியிலிருந்து இவ்வாறு மணல் மண் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர்களுக்கு
அண்மித்த பகுதியில் இவ்வாறு தொடர்ச்சியாக மண் அகழப்பட்டு வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், சட்டவிரோத மணல் மண் அகழ்வு மேற்கொண்டு வரும் கும்பல் ஒன்றே தினந்தோறும் பல
டிப்பர்கள் மண்ணை செம்பியன் பற்று தாளையடி கடற்கரை வீதி வழியாக 24 மணிநேரமும்
ஏற்றிச்சென்று விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பல ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட
தரப்புக்களுடன் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த மணல் மண் அகழும் பிரதேசத்திலிருந்து மருதங்கேணி காவல் நிலையம் சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.
இருப்பினும், இது வரை இது தொடர்பாக எந்தவித சந்தேகநபர்களும்
குறித்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்சியாக இடம்பெறும் மணல்
மண் அகழ்வால் வடமராட்சி கிழக்கு வளம் அழிக்கப்படுவது மட்டுமல்லாது மக்கள்
குடியிலுக்க முடியாதளவுக்கு கடல் நீர் உட்புகக்கூடிய நிலமையும் தோன்றியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
