Home இலங்கை அரசியல் ஐஎம்எப் உடன்படிக்கை மறுசீரமைப்பு: எச்சரிக்கும் நிதி இராஜாங்க அமைச்சர்

ஐஎம்எப் உடன்படிக்கை மறுசீரமைப்பு: எச்சரிக்கும் நிதி இராஜாங்க அமைச்சர்

0

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் பிணைமுறிப் பத்திரதாரர்களுடன் செய்துகொண்ட இணக்கப்பாடுகளை இழந்து நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்குள் செல்லும் அபாயம் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் எச்சரி்த்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கொழும்பு (Colombo) பிளவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியம்

அத்துடன், உழைக்கும் போது செலுத்தப்படும் வரியை திருத்தியமைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அது தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பதன் பின்னர், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரிகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், “அதல பாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டை மீட்டு, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய நாடாக மாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. வேறு யாரும் சவாலை ஏற்க விரும்பவில்லை. மேலும் அந்த சவாலை ஏற்கும் திறன் அவர்களிடம் இருக்கவும் இல்லை.

நாம் கட்டியெழுப்பிய பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னோக்கிக் கொண்டு செல்வதை ஐந்தாண்டுத் திட்டம் – இயலும் சிறிலங்கா தேர்தல் விஞ்ஞாபனம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து, கிடைக்கும் பயன்களை அதிகரிக்க வேண்டுமா என்பதை செப்டம்பர் 21ஆம் திகதி மக்கள் தீர்மானிப்பர்.” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version