Courtesy: Sivaa Mayuri
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வுக்கான திகதிகள், உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் இதனை தெரிவித்துள்ளார்.
ஆசிய பசுபிக் திணைக்களத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான உயர்மட்ட குழு இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அவரது புதிய பொருளாதாரக் குழுவைச் சந்திப்பதற்காக தற்போது கொழும்புக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார முன்னேற்றம்
பிரதிநிதிகள் குழு, இலங்கை அதிகாரிகளுடன், அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் அவர்களின் பொருளாதார சீர்திருத்த நோக்கம் பற்றி விவாதிக்கிறது.
இந்தநிலையில் தற்போது இலங்கை சென்றுள்ள பிரதிநிதிகளின் சந்திப்புக்கள் முடிந்ததும், மூன்றாவது மதிப்பாய்விற்கான திகதிகள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும், என்று ஜூலி கோசாக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான திட்ட செயல்திறன் வலுவாக இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது, பணவீக்கத்தைக் குறைப்பது, இருப்புக்களை அதிகரிப்பது மற்றும் வருமான திரட்டலை மேம்படுத்துவது போன்றவற்றில் சீர்திருத்த முயற்சிகள் பலனளிக்கின்றன என்று கோசாக் கூறியுள்ளார்.
உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்
பத்திரப்பதிவுதாரர்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், செப்டம்பர் 18 அன்று இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களும், இலங்கை பிரதிநிதிகளும் கொள்கையளவில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
இது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டுவதாக அவர், குறிப்பிட்டுள்ளார்.