இலங்கையின் நிதி இலக்குகள் அடையப்பட்டதற்கு, எதிர்பாராத வகையில் நிகழ்ந்த வாகன இறக்குமதியே முதன்மைக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
அத்துடன் இத்தகைய எண்ணிக்கையிலான வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்ட அவர் இதுவே அரசாங்கத்திற்கு வருமானத்தைத் தந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
வரி வருமானம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாங்களும் இதனை எதிர்பார்க்கவில்லை, எங்களுடைய கணிப்பு தவறாகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.
மேலும் 1,900 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நாணய கடிதங்கள் திறக்கப்பட்டன. அதில், 1,400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியுடைய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
இதன் விளைவாக, யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் அரசாங்கத்திற்குக் கணிசமான வரி வருமானம் கிடைத்துள்ளது“ என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
