இந்தியாவில் (India) நாட்டுப் படகு கடற்றொழிலாளர்களால் நாளை மேற்கொள்ளப்பட இருந்த தொடருந்து மறியல் போராட்டமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து 24 மணி நேரத்திற்குள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழக கடற்றொழிலாளர்கள் விடுதலை குறித்து உத்தரவாதம் அளிக்க
வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான
கடற்றொழிலாளர்களுடன் நேற்று (3) நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் போதே போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்த போராட்டம்
இராமநாதபுரம் – பாம்பன் மற்றும் தொண்டி, நம்புதலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற 25 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை உடனடியாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்ய
வலியுறுத்தி இந்திய நாட்டுப்படகு கடற்றொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி மாலை, தொடருந்து மறியல்
போராட்டமும், பாம்பன் வீதியில் பாலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் நாட்டுப்படகு கடற்றொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கால அவகாசம்
இதனிடையே, கடற்றொழிலாளர்களின் போராட்டங்களை மீள பெற்று கடற்றொழிலுக்கு செல்வது
தொடர்பாக நேற்று இராமேஸ்வரம் வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது, அதிகாரிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் நாளை (05) நடைபெற இருந்த தொடருந்து மறியல் போராட்டத்தை பாம்பன் கடற்றொழிலாளர்கள் தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளனர்.
மேலும், மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் ஜெய்சங்கர் (Jaishankar), நேற்று மாலையிலிருந்து 24 மணி நேரத்திற்குள் தமிழக கடற்றொழிலாளர்கள் விடுதலை தொடர்பாக உறுதி அளிக்க
வேண்டும் எனவும் அவ்வாறு கடற்றொழிலாளர்கள் விடுதலை தொடர்பாக தகவல் வெளியாகாத பட்சத்தில் முன்னதாக திட்டமிட்டது போன்று போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.