Home இலங்கை அரசியல் அநுர மற்றும் ரணில் உள்ளிட்டோரை சந்தித்த ஜெய்சங்கர்! நீண்ட கலந்துரையாடல்

அநுர மற்றும் ரணில் உள்ளிட்டோரை சந்தித்த ஜெய்சங்கர்! நீண்ட கலந்துரையாடல்

0

இலங்கை வருகைத் தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பலவேறு முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டை வந்தடைந்தார்.

பல்வேறு கலந்துரையாடல்கள் 

இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி, அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இன்று பிற்பகல் கொழும்பில் வைத்து சந்தித்த ஜெய்சங்கர் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி  முர்மு ஆகியோரின் வாழ்த்துக்களையும் ஜனாதிபதி அநுரவிடம் வெளிப்படுத்தினார்.

மேலும், இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.  

இதேவேளை,  பிரதமர் ஹரினி அமரசூரியவையும் இன்று பிற்பகல் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அமைச்சர் விஜித ஹேரத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன்,  இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், பொருளாதார மறுசீரமைப்புக்கான ஆதரவையும் ஜெய்சங்கர் இதன்போது வெளிப்படுத்தினார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்  முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தலைவர்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது கடந்த இரு வருடங்களாக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த ரணில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும்  இந்திய வெளிவிவகார அமைச்சர்  ஜெய்சங்கர் சந்தித்து  கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version