Courtesy: Sivaa Mayuri
இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு இரண்டு முக்கிய நன்மை திட்டங்களை அறிவித்துள்ளார்.
அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்ததினை தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஹேரத்துடனான சந்திப்பின்போதே இந்தியாவின் நன்மைத்திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதன்போது,இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களின் மூலம் இலங்கைக்கான இந்தியாவின் தற்போதைய அபிவிருத்தி உதவிகள் தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்.
61.5 மில்லியன் அமெரிக்க டொலர்
அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் மூலம் நவீனமயமாக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் 7 தவணைகள் செலுத்தி முடிக்கப்பட்ட கடன் வரித் திட்டங்களுக்கான 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக மாற்றலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இலங்கை தொடருந்து சேவைக்கு 22 டீசல் இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கைப் பிரதேசத்தைப் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தியதாகவும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
அபராத மறுபரிசீலனை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பான விடயமும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது
அவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான அபராதத்தை மறுபரிசீலனை செய்யவும் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமாரவை வலியுறுத்தினார்.
இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பான கருத்தாடலின்போது, இலங்கையின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுகின்ற அதேவேளையில் சமத்துவம், நீதி, கண்ணியம், சமாதானத்திற்கான தமிழர்கள் உட்பட அனைத்து சமூகங்களின் அபிலாசைகளுக்கும் இந்திய அமைச்சர் மீண்டும் இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தியுள்ளார்.