மன்னார் நகர சபை பிரிவில் அமைக்கப்பட்டு வருகின்ற காற்றாலை செயல்
திட்டத்திற்கு மன்னார் நகர சபையினால் வழங்கப்படுகின்ற குடிபுகு சான்றிதழ் ஐ இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என மன்னார் நகர முதல்வர் டானியல்
வசந்தன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த சான்றிதழை பெற்றுக் கொள்ளாமல்
அவர்கள் தமது செயல்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்தால் நகர சபை கட்டளைச்
சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் நகர சபையில் இன்று (24) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்
போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனுமதி
அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார் நகர சபை பிரிவில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்களுக்கான
அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது.
எனினும் மன்னார் நகர
சபையிடம் எவ்வித அனுமதியும், ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.சில நிறுவனங்களின் அனுமதியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை அனுமதியை
வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை(23) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில்
வினவிய விடயம் என்ன என்றால் 1986 ஆம் ஆண்டு சட்டத்தின் படி நகர அபிவிருத்தி
அதிகார சபை 9 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கும், ஒரு ஏக்கருக்கு
மேற்பட்ட நிலங்களிலே முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கும்
நகர அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்குகிறது.
ஆனால் நகர சபையின் சட்டம் 1939 ஆம் ஆண்டு 255 ஆவது பிரிவு 118
சொல்லுகின்றது.அனுமதியற்ற கட்டிடங்களுக்கான அறிவுறுத்தல்களை கொடுக்க
வேண்டும்.
119 சொல்லுகின்றது அனுமதியற்ற கட்டிடங்களை அகற்ற வேண்டும்
என்று.ஆனால் மன்னார் நகர சபை பிரிவில் காற்றாலைக்கு வழங்கப்பட்ட அனுமதியில்
மன்னார் நகர சபையின் எவ்வித அனுமதியும் இல்லை.
முற்றாக தடை
எனவே நான் அவர்களிடம் வினவினேன் எங்களுடைய 255 பிரிவு 118,119 இன் பிரகாரம்
ஏன் குறித்த திட்டத்திற்கு தடை விதிக்க கூடாது? அல்லது அனுமதியற்ற கட்டிடம் என
அகற்ற முடியாதா? என அவர்களிடம் வினவினேன்.
அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் பிழையை ஏற்றுக் கொண்டார்கள்.
இனி வரும்
காலங்களில் மதஸ்தலங்கள் உள்ளிட்ட சில கட்டிடங்கள் அமைக்கின்ற போது நகர சபையின்
அனுமதி மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை கோபுரங்களுக்கு ‘குடிபுகு சான்றிதழ்’
(C.O.C) எடுத்து உள்ளார்களா?என்று கேள்வி எழுப்பினேன்.ஆனால் அவர்கள்
அச்சான்றுதழை எடுக்கவில்லை.
குறித்த சான்றிதழ் இல்லாமல் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்தல்,அல்லது
அவர்கள் அமைத்துள்ள கட்டிடங்களை பயன் படுத்துவதையோ முற்றாக தடை செய்ய
வேண்டும்.
நகர சபை சட்டத்தின் ஊடாக ‘குடிபுகு சான்றிதழ் இல்லை என்றால்
குறித்த செயல் திட்டத்தை தடை செய்கிற அதிகாரம் எமக்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
