யாழ்ப்பாணத்தில் (Jaffna) வடக்கு – கிழக்கு மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த நீதி கோரி கையெழுத்து
போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (29) காலை
முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப்
புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக்
கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில்
கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல
பகுதிகளிலும், இன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரன், சுகாஸ், சர்வேஸ்வரன், கஜதீபன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலர் நிகழ்வை ஆரம்பித்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
செம்மணி உட்பட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகள் மற்றும்
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச
விசாரணையை வலியுறுத்த வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட
கையெழுத்த போராட்டம் இன்று (29) கிளிநொச்சி மாவட்டத்திலும்
மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு
செய்யப்பட்ட இக் கையெழுத்து போராட்டமானது கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு
முன்பாக இன்று காலை 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், தமிழ்த்தேசிய
மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், ஜனநாயக
தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் பொது
மக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
வவுனியா
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள்
மற்றும் இனப்படுகொலைக்காக சர்வதேசத்திடம் நீதி கோரி கையெழுத்து போராட்டமானது
இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் இடம்பெற்றிருந்தது.
தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த
போராட்டமானது இடம்பெற்றிருந்தது.
தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த
போராட்டமானது இடம்பெற்றிருந்தது.
இப்போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாநகர மேயர் சு.காண்டீபன் உட்பட
பலரும் கலந்து கொண்டு கையொபப்மிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.