Home சினிமா IPL திரை விமர்சனம்

IPL திரை விமர்சனம்

0

டிடிஎப் வாசன், கிஷோர், அபிராமி நடிப்பில் வெளியாகியுள்ள IPL திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.

கதைக்களம்

டாக்ஸி ஓட்டுநரான குணசேகரன் (கிஷோர்) வேலையை இழந்ததால், சொந்தமாக கார் வாங்கி டாக்ஸியாக ஓட்டுகிறார்.

ஒருநாள் டெலிவரி பாயான அன்பு (வாசன்) பைக்கில் செல்லும்போது குணசேகரன் குறுக்கே வர, அவரை திட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.

ஆனால் வேறொரு நபர் அவரது கால்மேல் பைக்கை ஏற்றிவிட, குணசேகரனுக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது.

இதனால் அன்பு மீது அவர் கடும் கோபத்தில் உள்ளார். இதற்கிடையில், த.கு.க என்ற கட்சியின் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அதே கட்சியின் முதல்வர் பண்ணை வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை திருட ஆட்களை அனுப்புகிறார். அதன் விளைவாக சில கொலைகளும் நடக்கின்றன.

இந்த சூழலில் மதுரையில் ராஜேஷ் என்ற இளைஞர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்ததாக நினைத்து, போலீஸ் அதிகாரி முத்துக்கருப்பன் (போஸ் வெங்கட்) லாக்கப்பில் வைத்து தாக்க அந்த இளைஞர் இறந்து விடுகிறார்.

ஆனால், அவரது செல்போனில் உள்ள ஒரு அதிர வைக்கும் வீடியோவை வைத்து முத்துக்கருப்பன் தப்பி பார்க்கிறார்.

அதற்கு அப்பாவியான குணசேகரனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் சேர்ந்து பலிகடாவாக்க பார்க்கிறார்கள்.

இதிலிருந்து தனது காதலியின் அண்ணனான குணசேகரனை டெலிவரி பாய் அன்பு எப்படி காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.
 

படம் பற்றிய அலசல்

அன்பு என்கிற கதாபாத்திரமாக வரும் டிடிஎப் வாசன் பில்டப் இல்லாமல் அறிமுகம் ஆகிறார். அப்போது அவர் கூறும் மெசேஜ் அவரை பின்தொடர்பவர்களுக்கு கனெக்ட் ஆவதால் கரகோஷம் எழுகிறது.

முதல் பாதிவரை வாசன் அடக்கி வாசித்திருக்கிறார் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு கிஷார்தான் அதிக காட்சிகளில் தோன்றுகிறார்.

முகபாவனைகளில் பெரிதாக நடிப்பை காட்டவில்லை என்றாலும் சண்டைக்காட்சிகளில் நம்பும்படி நடித்துள்ளார்.

குறிப்பாக, தன்னை பின்தொடர்பவர்களுக்கு காக கிளைமேக்சில் பைக் ரைடு ஸ்டண்ட் செய்துள்ளார் வாசன்.

ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்

மற்றபடி நடிக்க திணறுவது தெரிகிறது.

கிஷோர்தான் முழுப்படத்தையும் தாங்குகிறார். கால் உடைந்த நிலையில் தாங்கி தாங்கி நடப்பதில் தொடங்கி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் வசனங்களை எதார்த்தமாக பேசுவது என பிரமாதப்படுதுகிறார்.

ஆனால், அவர் போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்படும் காட்சிகள் எல்லாம் விசாரணை படத்தை பிரதிபலிப்பதாக உள்ளன.

மேலும் இரண்டாம் பாதி முழுவதும் கிஷோர் தாக்கப்படுவதை காட்டுவது தொய்வாக உணர வைக்கிறது.

நரேன் முதல்வராக மிரட்ட, ஜான் விஜய் ஒன்றிரண்டு இடங்களில் வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்து விடுகிறார்.

ஹரிஷ் பேரடி கொடூர வில்ல முகத்தை காட்டி மிரட்டுகிறார். போஸ் வெங்கட்டும், அபிராமியும் தங்கள் பங்குக்கு படத்தை தூக்கி நிறுத்துகின்றனர்.

என்றாலும் படத்தில் பல லாஜிக் மீறல்கள். மதுரையில் லாக்அப் மரணம் ஆனதை மறைக்க சென்னையில் உள்ள ஒருவரை ஏன் குற்றவாளியாக மாற்ற முயற்சிக்க வேண்டும்?

வாசன் சாதாரண டெலிவரி பாயாகத்தான் அறிமுகமாகிறார்.

ஆனால் இரண்டாம் பாதி முழுவதும் காரிலேயே பயணிக்கிறார். அது ஏன் , எப்படி என்று விளக்கவில்லை.

ஹரிஷ் போன் செய்யாமலேயே போனில் பேசுகிறார். அது அப்படமாக கேமராவில் தெரிகிறது. இதுபோல ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.

ஒரு நல்ல கதையை கையில் எடுத்திருந்தாலும் மேக்கிங்கில் சொதப்பல்கள்.

தேர்ந்த நடிகர்களின் நடிப்பே படத்தை காப்பாற்றுகிறது.

முதல் பாடல் அருமை. பின்னணி இசை ஓகே. படம் முடிந்த பின் லாக்அப் சித்ரவதையால் இறந்தவர்களை காட்டிய இயக்குநரை பாராட்டலாம். டிடிஎப் வாசனுக்கு இப்படம் நல்ல அறிமுகம்தான்.

க்ளாப்ஸ்

கதைக்களம்

நடிகர்களின் பங்களிப்பு

பல்ப்ஸ்

லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் எடுத்துக்கொண்ட கதைக்காக இந்த IPL பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது.   

NO COMMENTS

Exit mobile version