ஈரான் (Iran) இஸ்ரேல் (Israel) மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் ஒருவரும் காயமடையவில்லை என இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை தூதரகம் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரானில் அணுசக்தி தொடர்பான தளங்கள் மீது அமெரிக்க விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக, இன்று (22) காலை 8.00 மணியளவில் இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களை குறிவைத்து தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள்
நாள் முழுவதும் நிலைமை அதிகரிக்கக்கூடும் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அதன்படி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா (Nimal Bandara), இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் விழிப்புடன் இருக்குமாறும், தாக்குதல்களின் போது சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு உத்தியோகபூர்வ பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுமாறு வலியுத்தியுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் 10 நாட்களை எட்டியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களாக ஆளில்லா விமான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், பலத்த காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தூதுவர் தெரிவித்துள்ளார்.
