ஐக்கிய மக்கள் சக்தியின் மொரட்டுவை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து இரான் விக்ரமரத்ன விலகவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் அண்மைக்காலமாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான மனோநிலை அதிகரித்து வருகின்றது.
கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தியுற்றுள்ள நிலையில், மேலும் சிலர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துவக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இன்னும் சிலர் கட்சி செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டுள்ளனர்.
கடிதம் மூலம் அறிவிப்பு
அந்தவகையில், முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரான் விக்ரமரத்ன ஐக்கிய மக்கள் சக்தி மொரட்டுவ தொகுதி அமைப்பாளர் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது பதவி விலகல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.