வடக்கு மாகாண ஆளுநரால் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதை கண்டித்துள்ள தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் கடந்த வாரம் தனியார் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் வடக்கு மாகாண ஆளுநர் குறித்து ஆசிரியர் தலையங்கம் எழுதியமை தொடர்பில் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது ஊடகக் குரல்களின் குரல்வளையை சிறிலங்கா அரச பயங்கரவாதம் தொடர்ந்து நசுக்குகின்ற செயற்பாடு என்றும் சாடியிருக்கிறது.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
குறித்த பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து வலம்புரியின் பிரதம ஆசிரியர் காவல்துறையினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருதார்.
பாதாள குழு உறுப்பினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி
கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி அந்தப் பத்திரிகையில் பிரசுரமான “வடக்கு மாகாண ஆளுநருக்கு ஓர் அவசர மடல்” என்ற ஆசிரியர் தலையங்கத்திற்கு எதிராகவே குறித்த முறைப்பாடு பதிவாகியிருந்தது.
இதற்கமைய கடந்த திங்கட்கிழமை(22.04.2024) அந்தப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு பல மணிநேரம் விசாரணைக்குட்படுத்தபட்டதுடன் வாக்குமூலமும் வழங்கியுள்ளார். குறித்த முறைப்பாட்டினை வடக்கு மாகாண ஆளுநர் சார்பில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கணக்காளர் பதிவு செய்திருந்தார்.
பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிவர்களின் எண்ணிக்கை
விசாரணைக்கு அழைத்ததன் பின்னணி
மக்கள் வரிப்பணத்தில் நல்லதொரு மக்கள் சேவையினை வடமாகாணசபை வழங்கவேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பில் குறித்த பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் ஒன்றினை தீட்டியிருந்தது.
அந்த ஆசிரியர் தலையங்கம் மக்கள் வரிப்பணித்திலிருந்து கிடைக்கும் அரச நிதியைச் சம்பளமாகப் பெற்று அரசின் எடுபிடியாக செயற்படும் வடக்கு மாகாண ஆளுநருக்கு சங்கடங்களைத் தோற்றுவித்திருக்கக்கூடும்.
ஏனெனில் வடக்கு மாகாண ஆளுநர் ஒரு தமிழராக இருந்துகொண்டும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றிச் சிந்திக்காது அதிகாரிகளைப் பந்தாடுவதும், ஊடகவியலாளர்களை மிரட்டுவதும் என தேவையற்ற பல விடயங்களையே மேற்கொண்டுவருகின்றார். அந்தவகையில்தான் குறித்த பத்திரிகை ஆசிரியரும் மிரட்டப்பட்டிருக்கிறார்.
தொடரும் அடக்குமுறை
தன்னதை்தானே ஜனநாயக நாடு என கூறிக்கொள்ளும் இலங்கை போன்ற நாடொன்றில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கழுத்தை நெரித்து தடுக்க ஆட்சியாளர்கள் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்படுவது தெரிந்ததொன்றே.
அதிலும் சமூக ஊடகங்களை முடக்கிவிடவென சிறிலங்கா அரசு அனைவரது எதிர்ப்புக்களிற்கும் மத்தியில் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யுமாறு சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வருகின்றது.
அந்த நிலையில்தான் கடந்த வாரம் புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்தமைக்காக கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இத்தகைய சூழலில் நல்லாட்சியொன்றை எதிர்பார்த்து தீட்டப்பட்ட ஆசிரிய தலையங்கமொன்றிற்கு எதிராக அரச காவல்துறையினை பயன்படுத்தி நாளிதழ் ஒன்றின் ஆசிரியரை மிரட்டி அடிபணிய வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை கேலிக்குரியதொன்றாகவே உள்ளது.
முன்னரும் ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்
கடந்த மாதம் வடக்கு மாகாணத்தின் நிர்வாகச் சீர்கேடுகள் கிழக்கு மகாணத்துடன் ஒப்பிட்டு தனது முகநூலில் ஊடகவியலாளர் ஒருவர் கருத்து ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதனை வாசித்த வடக்கு மாகாண ஆளுநர் தனது செயலாளர் ஊடாக காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டார். முறைப்பாட்டின் அடிப்படையில் ஊடகவியலாளர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாகவே தற்போது “ஆளுநருக்கு அவசர மடல்” எனும் தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் தீட்டியதற்காக பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியரும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.
இச் செயற்பாடானது தம்மை செம்மைப்படுத்த முன்வைக்கப்பட்டதொரு கருத்தாக கவனத்தில் கொள்ள வடக்கு ஆளுநர் தவறியமை ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர்பில் கேள்விகளையே எழுப்பி நிற்கின்றது.
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே விசாரணை
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை முடக்கிவிடவென சிறிலங்கா அரசு அனைவரது எதிர்ப்புக்களிற்கும் மத்தியில் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யுமாறு சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வருகின்ற நிலையில்
நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையிலேயே பத்திரிகை ஆசிரியர் மீதான விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கும் ஆளுநர் செயலகம் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் இனமத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயல்வதாகவும் பழி சுமத்தியிருக்கிறது.
இலங்கையில் இதுவரை இருந்த சட்டங்களின் அடிப்படையில் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாத நிலையே காணப்பட்டது.
ஆனால் அரகலய போராட்டத்தின் பின் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை அடக்கி ஒடுக்கவென ரணில் விக்மரசிங்கவால் கொண்டுவரப்பட்ட சட்டமான நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரணில் விக்ரமசிங்கவின் எடுபிடியான வடக்கு ஆளுநர் கையில் எடுத்திருக்கிறார்.
வடக்கு ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
இத்தகைய சூழலில் நல்லெண்ணமொன்றை எதிர்பார்த்து தீட்டப்பட்ட ஆசிரிய தலையங்கமொன்றிற்கு எதிராக அரச காவல் ஏவலாளிகளான காவல்தறையினரைப் பயன்படுத்தி நாளிதழ் ஒன்றின் ஆசிரியரை மிரட்டி அடிபணிய வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை கேலிக்குரியதொன்றாகவே உள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் மீது பல்வேறு அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அவர் வவுனியா மாவட்டத்தில் அரச அதிபராக இருந்தபோதும் அரசியல்வாதிகளின் காலில் விழுந்து தனது கணவனின் பெயரில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினைப் பெற்றுக்கொண்டு அதனை இற்றைவரை நிர்வகித்துவருகின்றார்.
அத்தோடு தனக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளைப் பழிவாங்குதல் உள்ளிட்ட அதிகார துஸ்பிரயோகங்கள் அம்மணிக்கு கைவந்த கலை. சிங்கள இனவெறி அரசின் கைக்கூலியாக, எடுபிடியாக செயற்படுவதில் அம்மணியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்கின்ற நிலையில் தான் அவரது அரச சேவை ஓய்வுக்காலத்தின் முன்பே அவரது ஓய்வுக்காலத்திற்கான சலுகைகள் யாவும் வழங்கப்பட்டு அவரை அளுநராக்கியது ராஜபக்ச அரசு.
எனினும் பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் அவரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு ஒரு வருடகாலம் பதவி நீக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ரணில் விக்ரமசிங்கவினால் அவர் ஆளுநராக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் பதவிக்கு வரமுன் சுங்கத்திணைக்களத்தில் பணியாற்றியபோது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு இவர் உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக தன் மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கருத்தால் எதிர்கொள்ள முடியாது காவல்துறையினரை வைத்து அச்சுறுத்தி அடிபணிய வடக்கு மாகாண ஆளுநர் முற்படுகின்றார்.
வடக்கு மாகாண ஆளுநர் ஒரு தமிழராக இருந்தபோதும் வடக்கு மாகாண மக்களுக்கான சேவைகளை திறம்படச் செய்யாது, ஆளுநர்கள் மேற்கொள்ளும் பொதுமக்கள் சந்திப்புக்களை தான் பதவிக்கு வந்த இத்தனை காலத்தில் ஒருதடவை கூட செய்யாத வடக்கு ஆளுநர் அரசின் எடுபிடியாக இருந்து ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் ஒடுக்க – அச்சுறுத்த முற்படுவதை தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மக்களின், ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்குகின்ற எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் சர்வாதிகார வடிவமாகவே பார்க்கப்படுமென்பதை சிறிலங்கா இனவாத அரசிற்கும் அதன் அடிவருடியான வடக்கு ஆளுநருக்கும் நினைவூட்டும் தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் இது தொடர்பில் சரவதேச ரீதியான அழுத்தங்களை சிறிலங்கா அரசிற்கு வழங்கும்“ எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |