கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்திய இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருந்தார்.
இதனையடுத்து அவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட நிலையில், விசாரணையின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகியிருந்த வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு
இந்நிலையில், குறித்த வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்திய இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களுடன் இரண்டு வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், இரண்டு மகசின்கள் மற்றும் ஏழு 9MM உயிருள்ள வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பத்து பேர் கைது
சந்தேகநபருக்கு துப்பாக்கிகளை வழங்கிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் வவுனியாவின் புளியங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இஷாரா செவ்வந்தி நாடுகடத்தல் சம்பவம் தொடர்பாக இதுவரை பத்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், படகுகளை வழங்கிய கைது செய்யப்பட்ட நபர் 52 வயதுடையவர், அதே நேரத்தில் அவருக்கு துப்பாக்கிகளை வழங்கிய நபர் 43 வயதுடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.
