பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள முக்கிய வரலாற்றுப் பகுதிகளை இஸ்ரேல் கையகப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
அதன்படி, மேற்குக் கரையில் அமைந்துள்ள செபாஸ்டியா என்ற பெரும் தொல்லியல் தளத்தின் பரந்த நிலப்பகுதிகளை கையகப்படுத்தும் உத்தரவை, இஸ்ரேலின் சிவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஒலிவ மரங்கள் உள்ளன என்றும், அவை பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானவை என்றும் குடியேற்ற எதிர்ப்பு அமைப்பான Peace Now தெரிவித்துள்ளது.
பண்டைய இஸ்ரேல் அரசின் தலைநகர்
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய பரந்த நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது முதன்முறையாகும் என அந்த அமைப்பு கூறுகிறது.
Image Credit: Haaretz
செபாஸ்டியா பகுதியின் இடிபாடுகளின் கீழ், பண்டைய இஸ்ரேல் அரசின் தலைநகரமான சமாரியா இருந்ததாக நம்பப்படுகிறது.
மேலும், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடமாக கருதும் தலமும் இதே பகுதியிலுள்ளது. இந்த தளத்தை சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்காக இஸ்ரேல் அரசு 2023ஆம் ஆண்டு சுமார் 9.24 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கியது.
1967 போரில் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா ஆகியவற்றை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அதன்பிறகு, மேற்குக் கரையில் மட்டுமே 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட யூத குடியேற்றவாசிகளை அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்களில் குடியேற்றியுள்ளதுடன், கிழக்கு ஜெருசலேமில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குடியேறியுள்ளனர்.
பாலஸ்தீனியர்களின் வெளியேற்றம்
இதற்கிடையில் சமீபத்தில் பெத்லஹேம் அருகே புதிய, அங்கீகரிக்கப்படாத குடியேற்றப் புறக்காவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
Image Credit: Financial Times
மேற்குக் கரையில் குடியேற்றவாசிகளின் வன்முறையை பதிவு செய்த பாலஸ்தீனிய செயற்பாட்டாளர் ஐமன் கிரையேப் ஓடே அண்மையில் இஸ்ரேல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, விசாரணையின்றி காலவரையற்ற தடுத்து வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து மொத்தம் 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதன் மூலம் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது.
1967ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து மேற்குக் கரையில் நடைபெற்ற மிகப்பெரிய இடம்பெயர்வு இதுவாகும்.
