யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழ் அரசுக்
கட்சி இன்று (19) தாக்கல் செய்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ அரசுக் கட்சி வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும்
போட்டியிடுகின்றது.
இதற்கான வேட்பு மனுக்களை கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ
சுமந்திரன் தலைமையில் இன்று காலை கிழக்கு மாகாணத்தில் தாக்கல் செய்திருத்தனர்.
வேட்பு மனு
இதனைத் தொடர்ந்து வடக்கில் யாழ் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான
வேட்பு மனுக்களை யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று மாலை தாக்கல்
செய்துள்ளது.
இதனை கட்சியின் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான தமிழர் கட்சியின்
உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்தில் இதற்கான
வேட்பு மனுக்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக
இலங்கைத் தமிழரசுக்கட்சி மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய வேட்புமனுப்
பத்திரங்களை இன்று (19) கையளித்துள்ளது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின்
வேட்புமனுப் பத்திரங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுசெயலாளர்,
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கையெழுத்திட்டார்.
அதனைத்தொடர்ந்து கரைதுறைப்பற்று, துணுக்காய், புதுக்குடியிருப்பு ஆகிய மூன்று
உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனுப்பத்திரங்களை
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான துரைராசா ரவிகரன் கையளித்தார்.
முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை
அணிவித்து, மலர்தூவி அஞ்சலி மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு குறித்த
வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.
அத்தோடு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மாந்தை கிழக்கு உள்ளூராட்சி
மன்றத்திற்குரிய வேட்புமனு பத்திரம் நாளையதினம் (20.03.2025) கையளிக்கப்படுமென
இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பெருந்திரளான இலங்கைத் தமிழரசுக்கட்சித் தொண்டர்கள் மற்றும்,
உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள
கட்சிகள் இன்றைய தினம் (19) மாலை வரை 5 தமது வேட்பு
மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்
நிர்மலநாதன் தலைமையில் இன்றைய தினம் காலை மன்னார் நகர சபை மற்றும் மாந்தை
மேற்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் நகர
சபை,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய
தீப் லொக்கு பண்டார தலைமையில் மன்னார் நகர சபை,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு
ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி
சார்பாக மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி
டேவிட்சன் தலைமையில் மன்னார் நகர சபைக்கான வேட்பு மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
அபுக்கலாம் ஆசாத் முஜிப் ரஹ்மான் தலைமையில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு மன்னார்
நகர சபைக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியாவில் 3 உள்ளுராட்சி
மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி வவுனியாவில்
இன்று (19) தாக்கல் செய்தது
வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை, வெண்கலசெட்டிகுளம்
பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையே இதன்போது தாக்கல்
செய்தது.
வேட்புமனுவினை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வேட்பாளர்கள்,
ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் கையளித்திருந்தனர்.
திருகோணமலை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில்
போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுவில்
இன்று (19) கையொப்பம் இட்டனர்.
தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை காரியாலயத்தில் இடம் பெற்ற வேட்பு மனு
கையெழுத்திடும் நிகழ்வில் தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு
இடம்பெற உள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று (19) மட்டக்களப்பு பழைய
மாவட்ட செயலகத்தில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தாக்கல் செய்துள்ளன.
தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் இன்று தமது கட்சிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
