நல்லூரில் யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணியில் தமிழ் தேசிய கட்சிகள்
ஒன்றிணைந்து மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
யாழ்.மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள யாழ் மாநகர
சபைக்கு சொந்தமான காணியில் கடந்த சில வருடங்களாக மாவீரர் நாள் நினைவேந்தல்
நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குறித்த பகுதியை இரண்டு தரப்புக்கள் கோருவதால் அதில் யாருக்கு
வழங்குவது என்பதில் முடிவு எட்டப்படாத நிலை காணப்பட்டது.
கால அவகாசம் வழங்கப்பட்ட போதும்
இந்நிலையில் யாழ்.மாநகர சபையின் கடந்த மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் மதிவதனி
விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற போது
முதல்வரின் அறிவிப்பில், மாவீரர் நாள் நினைவேந்தலை செய்வதற்கு நல்லூரில் ஒரே
இடத்தை இரண்டு தரப்புக்கள் கோரும் நிலையில் அந்த இடத்தை மாவீரர் வார காலத்தில்
வாடகைக்கு விடாமல் இருக்கவும், எதிர்வரும் காலங்களில் தியாக தீபம் திலீபனின்
நினைவேந்தல், நல்லூரில் மாவீரர் நாள் நினைவேந்தலை யாழ் மாநகர சபையை
பொறுப்பெடுத்து செய்வதும் என்ற யோசனையை முன்வைத்தார்.
குறித்த யோசனை தொடர்பில்
உறுப்பனர்களிடையே வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதையடுத்து
அது தொடர்பில் முடிவுகள் எட்டப்படவில்லை.
அதில் இணக்கத்தை ஏற்படுத்த கால
அவகாசம் வழங்கப்பட்ட போதும் இணக்கமான நிலை ஏற்படவில்லை.
யாழ்.மாநகர சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள் மாநகர முதல்வரின்
யோசனையை வரவேற்ற போதும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற யாழ் மாநகர சபை அமர்விலும் குறித்த விடயம்
தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ் மாநகர சபை முதல்வர், சைக்கிளோ, மானோ தனியாக
ஒரு கட்சி நினைவேந்தல் செய்ய இடமளிக்க முடியாது.
தமிழ் தேசிய கட்சிகள்
ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் முடிவுக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர்.
