கோவிட் தொற்றுக் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் விளையாட்டு
நிகழ்வுகள் இடம்பெறாமையால் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி
பாடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தயவுக்காலமாக ஒரு வருடத்தை
அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேர்முகப் பரீட்சைக்காக இணைத்துக்
கொள்ள வேண்டுமென யாழ். மாவட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது.
குறித்த சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்போது தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2021,
2022 ஆகிய ஆண்டுகளில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.
நேர்முகப் பரீட்சை
இந்நிலையில் ஏனைய பாடங்கள் வெட்டு புள்ளிகள் அடிப்படையில் உள்வாங்கப்படும்
நிலையில் உடற்கல்வி பாடத்துக்கு தெரிவுசெய்யப்படுபவர்கள் நேர்முகப்
பரீட்சையில் விளையாட்டு நிகழ்வில் பங்கேற்ற சான்றிதழ் அடிப்படையில் புள்ளிவழங்கப்பட்டு உள்வாங்கப் படுகின்றனர்.
அந்த வகையில் தற்போது கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடத்துக்கு
விண்ணப்பித்த மாணவர்களில் 2021 க.பொ.த. உயர்தர மாணவர்களின் சான்றிதழ் காலம்
2017.01.01 – 2021.12.31 வரையும், 2022 க.பொ.த.உயர்தர மாணவர்களின் சான்றிதழ்
காலம் 2018.01.01 – 2022.12.31 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோவிட் தொற்று காரணமாக கடந்த 2020, 2021 ஆண்டுகளில்
விளையாட்டு நிகழ்வுகளில் பாடசாலைகள் பங்கேற்க முடியாத நிலைகாணப்பட்டது.
அழைப்புக் கடிதங்கள்
அதேவேளை 2020 வலய மட்ட போட்டிகள் வரை இடம்பெற்ற நிலையில் குறித்த
ஆண்டுக்குரிய விளையாட்டு சான்றிதழ்கள் இலங்கை முழுவதும் கல்வி அமைச்சால்
இரத்து செய்யபட்ட நிலையில் அச் சான்றிதழ்களை நேர்முகப் பரீட்சைக்கு
கொண்டுசெல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது கல்வியியல்
கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடத்துக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 2021
க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கு 2016 ஆண்டு சான்றிதழ்களையும் 2022 க.பொ.த.உயர்தர
மாணவர்களுக்கு 2017 ஆண்டு சான்றிதழ்களை பயன்படுத்த ஒருவருட மேலதிக
தயவுக்காலத்தை வழங்கவேண்டும் எனக் கோருகின்றோம்.
இதன் மூலம் கோவிட் பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம்
கிடைக்க வழியேற்படும் என நம்புகின்றோம்.
தற்போது நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில்
இவ்விடயம் குறித்து வடக்கு கல்வியமைச்சு இதில் கவனம் எடுக்க வேண்டுமென
கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.