யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சட்டவிரோதமான
முறையில் புதிதாக பதவியேற்றவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு
பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளராக இதுவரை காலமும்
பதவிவகித்தவர் தனது கற்கைகளை முடித்து வெளியேறிய நிலையில் அவருடைய பதவிக்கு
முன்னைய ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவில் அங்கம்வகித்த ஒருவர் யாப்பு
விதிகளுக்கு முரணாக புதிதாக பதவியேற்றுள்ளார்.
இதனால் புதிய கலைப்பீட மாணவர்
ஒன்றியத்திற்கான பிரதிநித்துவம் தடுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிராக கலைப்பீட
மாணவர் ஒன்றியம் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளன.
சட்டவிரோதமான பதவியேற்பு
சட்டவிரோதமான பதவியேற்பு தொடர்பான விசாரணைகளை உடன் மேற்கொள்ளுமாறு கலைப்பீட
மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கை கடிதம் ஒன்றும் நேற்றையதினம் (26) துணைவேந்தரிடமும் மாணவர் நலச்சேவை அலுவலகத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினை பிரதிநித்துவப்படுத்தி பிரதான மாணவர் ஒன்றிய
செயலாளர் பதவி வகிக்கும் நிலையில் முன்னைய ஒன்றியத்தின் காலம் நிறைவடைந்ததுடன் வறிதாக்கப்பட்ட செயலாளர் பதவிக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில்
அங்கம் வகிக்காத ஒருவர் புதிதாக பிரதான மாணவர் ஒன்றிய செயலாளர் பதவியை
கைப்பற்றியமை யாப்பு விதிமுறைகளுக்கு சட்டவிரோதமானது என யாழ் பல்கலைக்கழக
ஆசிரியர் சங்க வட்டாரங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
மாணவர் ஒன்றிய செயற்பாடுகளை வலுவிழக்க செய்யும் வகையிலும் யாழ் பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியத்திற்கு சமூக மட்டத்தில் இருக்கும் நன்மதிப்பை கெடுக்கும்
வகையில் புதிதாக சட்டவிரோதமாக செயலாளர் பதவியை பெற்றுள்ளாரா என்ற சந்தேகத்தை
மாணவர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.