ஐக்கிய நாடுகளின் (UN) துணைப் பொதுச்செயலாளர் அமினா முகமதை (Amina J. Mohammed) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சீனாவின் (China) டேலியன் நகரில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார மாநாட்டில் இன்று (29.06.2024) கலந்துக்கொண்டபோதே, குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது இருவருக்கும் இடையில் பல்வேறு வகையிலான கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.
இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில்,
நிலையான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) வடிவமைப்பாளராக உள்ள அமினா முகமதின் நேர்த்தியான மற்றும் சிறந்த உலகத்திற்கான குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்புகள் எனக்கு மிகவும் உந்துசக்தியை அளிக்கிறது.
நிலையான அபிவிருத்தி இலக்குகள்
“இலங்கையில் எமக்கு உள்ள சவால்கள் மற்றும் எமது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மற்றும் பெருந்தோட்ட சமூகம் உட்பட மிகவும் பின்தங்கிய சமூகங்களின் தற்கால நிலைப்பாடு தொடர்பான நிகழ்நிலைகளை இந்த சந்திப்பின் போது பகிர்ந்து கொண்டேன்.
மேலும், வறுமையைக் குறைப்பதற்கும், சமூகங்களை மேம்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தி இலக்குகளின்(SDGs) சாதனைகளை விரைவாகக் கண்காணிப்பதற்கும் துணைப் பொதுச் செயலாளரின் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.