Home முக்கியச் செய்திகள் யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற நகை கொள்ளை : பின்னணியில் உறவினர்

யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற நகை கொள்ளை : பின்னணியில் உறவினர்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பட்டப்பகலில் இடம்பெற்ற நகை திருட்டில் திட்டமிட்டு கொடுத்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (06.12.2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பகுதியில் வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 3/4 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளது.

களவாடப்பட்ட நகை

வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தவேளை மதியம் வீட்டின் கூரையை பிரித்து இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை
மேற்கொண்ட சுன்னாகம் காவல்துறையினர் நகையை திருடிய சந்தேகநபரை கைது செய்ததுடன் களவாடப்பட்ட நகையையும் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் இன்னொருவரும் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இன்றையதினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபரே குறித்த திருட்டுக்கு திட்டமிட்டு கொடுத்துள்ளார் என்பதுடன், அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு திட்டமிட்டு கொடுத்து திருட்டு இடம்பெற்ற பின்னர், முறைப்பாடு செய்வதற்காக, திருட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சேர்ந்து சுன்னாகம் காவல் நிலையத்திற்கு கைதுசெய்யப்பட்ட நபரும் சென்றுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக செய்திகள் : பு.கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version