முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று (23) முன்னிலையாகியுள்ளார்.
இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி விசாரணைகள் தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு தயார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நேற்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம்
இதேவேளை சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவொன்றை வெளியிடுமாறு கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன் இந்த குற்றச்சாட்டுக்கமைய முன்னாள் அமைச்சருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.