முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமாவுக்கு ஒரு நீதியும், ஜனாதிபதியின் செயலாளருடைய மனைவிக்கு இன்னொரு நீதியும் காட்டப்படுகின்றதா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊடகவியலாளர் சேபால் அமரசிங்கவே மேற்குறித்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமன்றி அவர்களின் விதவை மனைவிமாரின் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை இரத்துச் செய்வது தொடர்பில் அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளது.
இரட்டை நிலைப்பாடு
அதன் கீழ் ஹேமா பிரேமதாசவின் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளும் இரத்துச் செய்யப்படவுள்ளது.
விதவையொருவரின் சலுகைகளை இரத்துச் செய்வதில் முனைப்புக் காட்டும் அரசாங்கம், அதே சலுகைகளை தற்போதைக்கு உயிருடன் இருக்கும் ஜனாதிபதியின் செயலாளரின் மனைவிக்கு வழங்குவது எவ்வகையில் நியாயமானது என சேபால் அமரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
சஜித்துக்கு தனது அம்மாவைப் பராமரிக்க முடியாதா என்று கேள்வியெழுப்பிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம், ஜனாதிபதியின் செயலாளருக்கு தனது மனைவியைப் பராமரித்துக் கொள்ள முடியாதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இந்த அரசாங்கம் ஹேமா விடயத்தில் ஒரு நீதியும் ஜனாதிபதியின் செயலாளர் மனைவி விடயத்தில் இன்னொரு நீதியையும் கடைப்பிடிக்கின்றதா என்றும் கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
