Home இலங்கை அரசியல் எல்லை மீறும் ஊடகங்கள்: அரசாங்கம் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

எல்லை மீறும் ஊடகங்கள்: அரசாங்கம் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

0

சில ஊடகங்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளை அடைவதற்கு ஊடக சுதந்திரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(04) உரையாற்றிய நீதி அமைச்சர், சில ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் தங்கள் ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதை அவதானிக்க முடிந்தது என தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய ஊடகம்

தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் சகோதரருக்குச் சொந்தமான ஊடக நிறுவனத்தை மேற்கோள்காட்டி அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறை மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நோயும் இல்லாமல் தங்கியிருந்தார் என்பதையும் நீதி அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

கடுமையான நடவடிக்கை

தொடர்ந்தும், கருத்து வெளியிட்ட அமைச்சர், “நீங்கள் என்ன சொன்னாலும், உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது. உங்கள் ஊடகங்கள் மூலம் எங்களுக்கு அல்லது தனிநபர்களுக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் ஜனாதிபதி மன்னிப்பு பெற முடியாது.

அனைத்து கைதிகளும் சமமான நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

இறுதியில், சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 14 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எந்த நோயும் இல்லை என்பதைக் கண்டறிந்தது. பின்னர் அவர் சிறை அறைக்குத் திரும்பினார்.

ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் சட்ட ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுவார்கள்.”என்றார். 

NO COMMENTS

Exit mobile version