தேர்தல் காலத்தில் டியூசன் மாபியாக்கள், தேசிய மக்கள் சக்திக்கு செலவழித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
”பாடசாலைக் கல்வி முறைமையில் தற்போதைய நிலையில் மாணவர்கள் ஆசிரியர்களை
மதிக்காத சூழல் காணப்படுகின்றது.
பல்கலைக்கழகக் கட்டமைப்பிலும் இவ்வாறான
நிலைமையே காணப்படுகின்றது. ஆகவே இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இல்லாவிடின் மாணவர் சமுதாயம் தவறான வழிக்கே செல்லும்.
தேர்தல் காலம்
இந்த நாட்டில் அரிசி மாபியா, மின்சார மாபியா என்று பல மாபியாக்களும்
காணப்படுகின்றன. ஆண்டுக்குப் பல பில்லியன் ரூபா வருமானம் பெறும் டியூசன் மாபியா என்ற கைத்தொழில் துறையும் காணப்படுகின்றது.
ஏழ்மை நிலையில் உள்ள
பெற்றோர் மற்றும் மாணவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் மாபியாவாகவே இந்த டியூசன் மாபியாகக் காணப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த டியூசன் மாபியாவை
இல்லாதொழிப்பதாகக் குறிப்பிட்டது.
ஆனால், இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும்
எடுக்கப்படவில்லை.
தேர்தல் காலத்தில் இந்த டியூசன் மாபியாக்கள் தேசிய மக்கள் சக்திக்கு
செலவழித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.
ஆகவே, அந்த நன்றிக் கடனுக்காக அரசு
அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று சந்தேகம்
எழுந்துள்ளது.
கல்வி மற்றும் உயர்கல்வி துறையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
புதிய
கல்வி மறுசீரமைப்பு நாட்டுக்கு அத்தியாவசியமானது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது தேசிய கல்வி
ஆணைக்குழுக் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான கொள்கையை வெளியிட்டது. இந்த
அறிக்கையின் பரிந்துரைகளைப் புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்கியிருக்க
வேண்டும்.” என்றார்.
