யாழில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு உரிய தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்(Selvarajah Kajendran) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(09) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
”யாழில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் ஒன்று நிலவி வருகின்றது.
குறிப்பாக யாழில் நேற்றைய தினம்(08) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வீதியை மறித்து பாரிய போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர், வைத்திய சாலையில் இடம்பெற்று வரும் ஊழல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக பல விடங்களை அம்பலப்படுத்தியிருந்தார்.
அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே பொதுமக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பொதுமக்கள் ”சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்திய சேவைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் அங்கு பல்வேறு ஊழல்கள் இடம்பெற்று வருவதாகவும், குற்றம் சுமத்தியிருந்தனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.