கண்டி (Kandy) – தவுலகல பகுதியில் வானில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியை காப்பாற்ற முற்பட்ட இளைஞனின் வீர செயலை இலங்கை காவல்துறை தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
தவுலகல – அம்பெக்க பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய அர்ஷாத் அஹமட் என்ற இளைஞனே வீர செயலுக்காக பாராட்டப்பட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி கண்டி – தவுலகல பகுதியில் வைத்து வான் ஒன்றில் வந்த மர்ம கும்பல் ஒன்று காம்பொல – மரியாவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாத்திமா ஹமீரா என்ற பாடசாலை மாணவியை கடத்திச் சென்றிருந்தது.
கடத்தல் சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் கடந்த 11 ஆம் திகதி கண்டுபிடக்கப்பட்டதுடன், மறுநாள் அதாவது 12ஆம் திகதி கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வாகனத்தின் சாரதி தவுலகல காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை (13.01.2025) அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தாயின் தம்பியான தனது மாமாவின் மகளையே இவ்வாறு அழைத்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த சந்தேக நபர் ஜப்பானில் பணிபுரிந்ததாகவும், மாமாவிடம் தனது பணம் கொடுக்கப்பட்டதாகவும், பணத்தை தராததால் தான் இதுபோன்ற நடவடிக்கை எடுத்து 50 இலட்சம் ரூபா கப்பம் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
காப்பாற்ற முற்பட்ட இளைஞன்
இந்த சம்பவம் தொடர்பாக காப்பாற்ற முற்பட்ட இளைஞன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “இந்தக் கடத்தல் எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு பாடசாலை சிறுமியை கடத்துவது என்பது எனக்கு புரிந்தது.
நான் வேலைக்குப் போகும் நோக்கத்தை விட்டுவிட்டு வேனை நோக்கி ஓடினேன். அப்போது சிறுமியை வானுக்குள் இழுத்துவிட்டனர். நான் சென்று அங்கிருந்த ஒருவரைப் பிடித்து தொங்கினேன்.
அவர் என்னை தாக்கினார். நான் கைகளை விடவில்லை.
சிறுமியை வெளியே எடுக்க முயற்சித்த வேளையில் வேன் புறப்பட்டுச் சென்றது. நான் தொங்கிக்கொண்டு இருந்ததால் அவர்களால் வேனின் கதவை மூட முடியவில்லை. உள்ளே இருந்த நபர் என்னை தாக்கிக்கொண்டிருந்த போதே என் கைகளை வெட்டினார்.
பின்னர் என்னை வானில் இருந்த வெளியே தள்ளிவிட்டனர். வான் வேகமாக சென்ற வேளையில் நான் கீழே விழுந்து காயமடைந்தேன்.
இதையடுத்து, எனது அப்பாவுக்கும் மாமாவுக்கும் தொலைபேசி அழைப்பை எடுத்து அவ்விடத்திற்கு வரவழைத்தேன். எனது கை, கால்கள், முகம், விரல்கள் காயமடைந்திருந்தன.
அந்த வானின் சாரதியுடன் மூன்று பேர் வானில் இருந்தார்கள். இது எங்கள் குடும்பப் பிரச்சினை என்று உள்ளே இருந்தவர்களில் ஒருவர் தெரிவித்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.