களனி பல்கலைக்கழகமும் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளவுள்ளன.
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப்
பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
இலங்கையின் உயர்கல்வித் துறையை சர்வதேசமயமாக்குதல் மற்றும் பல்கலைக்கழகங்களை உலகத் தரப்படுத்தல் சுட்டிகளுக்கு இணங்க மேம்படுத்துதல் ஆகிய குறிக்கோள்களை அடையும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
முக்கிய நோக்கங்கள்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும்
பிரதமர் சமர்ப்பித்த யோசனையின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்மூலம், இலங்கையின் முக்கியப் பல்கலைக்கழகங்களான பேராதனைப் பல்கலைக்கழகம்
சீனக் குடியரசின் சீன விஞ்ஞானக் கல்வி நிறுவகத்தின் புவியியல் மற்றும் புவி
இயற்பியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது.
இதேபோல், களனிப் பல்கலைக்கழகம் இந்தியாவின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடனும்,
மொரட்டுவப் பல்கலைக்கழகம் தனியாக ஜப்பானின் யொகோஹோமா தேசிய பல்கலைக்கழகத்தின்
பல்புலமை விஞ்ஞான நிறுவகம் மற்றும் டொகுயாமா பல்கலைக்கழகத்தின் தேசிய
தொழிநுட்ப நிறுவகம் ஆகிய இரண்டு நிறுவனங்களுடனும் தனித்தனியாக ஒப்பந்தம்
செய்யவுள்ளது.
இந்த நான்கு முக்கியமான ஒப்பந்தங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச்
செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
