Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வுகள் உட்பட,கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான முக்கிய குழு, மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் செயற்படும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழுவின் அறிக்கை, கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா சார்பாக ஐக்கிய இராச்சியத்தின் தூதுவரால் முன்வைக்கப்பட்டது.
2024 செப்டம்பர் 9ஆம் திகதியன்று ஆரம்பமான, மனித உரிமைகள் பேரவையின் 57வதுஅமர்வில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலின் போது, முக்கிய குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது.
மனித உரிமைகள்
இதன்படி, இலங்கையில் பல புதிய அல்லது முன்மொழியப்பட்ட சட்டங்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மீதான தாக்கம் குறித்த உயர்ஸ்தானிகரின் அதிருப்தியை தாம் பகிர்ந்து கொள்வதாக முக்கிய குழு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களும் இலங்கையின் மனித உரிமைக் கடமைகளுடன் இணங்க வேண்டும் என்று அந்தக்குழு வலியுறுத்தியுள்ளது
சிவில் சமூகம், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் இலங்கையில் நீடிப்பதாக அறிக்கை கூறுகிறது.
அத்துடன் தன்னிச்சையான கைதுகள் மற்றும் சித்திரவதைகள் பற்றிய அறிக்கைகள் குறித்தும்,குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது
இந்தநிலையில், இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வுகள் உட்பட, கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, இலங்கையின் முக்கிய குழு வலியுறுத்தியுள்ளது.
இராணுவத்தின் கட்டுப்பாடு
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில நிலங்கள் பொதுமக்களின் கட்டுப்பாட்டிற்கு திரும்புவதை வரவேற்கும் அதே வேளையில், வடக்கு மற்றும் கிழக்கில் நிலப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் முக்கியத்துவத்தை முக்கிய குழு வலியுறுத்தியது.
இது, இனங்களுக்கு இடையேயான பதற்றங்களை அதிகப்படுத்துகிறது மற்றும் சமூகங்கள் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாக கடைப்பிடிக்கும் திறனை பாதிக்கிறது என்று அந்தக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை தேர்தலை நெருங்கி வருகிறது. இந்தநிலையில்,அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிக்கான சாதகமான சூழலை உருவாக்குதல் அவசியம் என்றும் முக்கிய குழு வலியுறுத்தியுள்ளது.