Home இலங்கை குற்றம் வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏழு சந்தேக நபர்கள் கைது

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏழு சந்தேக நபர்கள் கைது

0

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை(08.08.2024) அதிகாலை வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் இளைஞர்
ஒருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட
விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசாரணை

வவுனியா, பூந்தோட்டம் பகுதிகளை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த புதன்
கிழமை(07) மாலை பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனது பிறந்தநாள்
நிகழ்வினை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

அந்த நிகழ்வில் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளதுடன்
அங்கு வந்த அவரது சில நெருங்கிய நண்பர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், பிறந்தநாள் நிகழ்வினை சிறப்பிப்பதற்காக நண்பர்கள், இளைஞர்
குழுக்களாக பாட்டுப்பாடி நடனம் ஆடியுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் இருந்த நெருங்கிய நண்பர்கள் பிறந்தநாள்
நிகழ்வில் கலந்து கொண்ட பெண் நண்பிகளுடன் சேர்ந்து நடனமாட முற்பட்ட போது
பிறந்தநாளை கொண்டாடிய இளைஞன் அதனை அனுமதிக்காது தடுத்துள்ளார்.

இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்
ஏற்பட்டுள்ளதுடன் அங்கு இருந்த உறவினர்கள் இதனை சமரசம் செய்து வைத்துள்ளனர்.

இதன் பின்னர். வியாழக்கிழமை(08) அதிகாலை 1மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த
இளைஞர் குழு ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனை கடத்தி சென்று குட்செட் வீதியில் உள்ள
கருமாரி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டில் தனிப்பட்ட தகராறு
காரணமாக இளைஞனை அடைத்து வைத்து கடுமையாக தாக்குதல்
நடத்தியுள்ளதாக பொலிஸா தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பாழடைந்த வீட்டில் இளைஞனை அடைத்து வைத்து விட்டு
கடத்தியவர்கள் தப்பி சென்ற நிலையில், கடத்தப்பட்ட இளைஞனை மீட்டு அவரை
வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 20 வயது தொடக்கம் 22 வயது வரையுள்ள 7 இளைஞர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பட்டைகாடு பகுதியைச் சேர்ந்த 3 பேரும், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த
2 பேரும் கோயில்புதுக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரும் தோணிக்கல் பகுதியை
சேர்ந்த ஒருவருவரும் உள்ளடங்கியுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது கடத்தலுக்கு
பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் சான்று பொருட்களுடன் அவர்களை
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version