அரச புலனாய்வு சேவையுடன் இணைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையில் பணிபுரியும் கான்ஸ்டபிள், அரச புலனாய்வுத் தகவல்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்ததற்காக, கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி(kilinochchi) விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
வெளிதரப்பினருக்கு வழங்கப்பட்ட புலனாய்வுத்தகவல்கள்
சந்தேக நபர் அரச புலனாய்வு தகவல்களை அனுமதியின்றி வெளித் தரப்பினருக்கு வழங்குவதாக கிடைத்த புலனாய்வுப் தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி விசேட அதிரடிப்படை முகாமின் நிலையத் தளபதி உள்ளிட்ட குழுவினரால் நேற்றுமுன்தினம் (27) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது, சந்தேகநபரான கான்ஸ்டபிளிடம் இருந்து ஆறு வகையான கையடக்கத் தொலைபேசிகளும் ஏழு சிம் அட்டைகளும் காணப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் திட்டமிட்ட குற்றக் கும்பல் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர் என தெரியவந்துள்ளது.
இந்த புலனாய்வுத் தகவல்களை அவர் பணத்திற்காக வெளித் தரப்பினருக்கு வழங்கியுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.
09.28 முதல் அவர் கிளிநொச்சி விசேட அதிரடிப்படை முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.