Courtesy: H A Roshan
திருகோணமலை பறையன்குளம் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் காளியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள காணிகளை வனத்துறை கையகப்படுத்தியுள்ளதாகவும் இவற்றை விடுவிக்க வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மொறவெவ பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(28.01.2025) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மொறவெவ பிரதேச செயலாளர் ஆ. நாவேஸ்வரனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற குறித்த கூட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமை தாங்கியுள்ளார்.
உறுதியளிக்கப்பட்ட தீர்வு
இதன்போது, மொறவெவ பகுதியில் அமைந்துள்ள நாலாம் கண்டத்தில் உள்ள காணி உரிமையாளர்கள் தத்தம் காணிகளில் குடியமர நீண்ட காலமாக அனுமதிக்கப்படாமை பற்றி குகதாசன் கலந்துரையாடியுள்ளார்.
அவர்களை உடன் குடியமர்த்த ஆவன செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதற்கமைய, இதற்கு ஆவன செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.
மேலும், பறையன்குளம் காணி விவகாரம் தொடர்பில் வனத்துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு பெற்றுத் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
