முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை
ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு
கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான
எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தப் பாதிப்புத் தொடர்பிலான
விசேட கலந்துரையாடல் நேற்று (22.12.2025) இடம்பெற்றது.
தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு
இந்த கலந்துரையாடலில் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை
ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப்பாதிப்பை
எதிர்கொள்வதால், அவர்களை கொக்குத்தொடுவாயில் மாற்று வாழ்விடம் அமைத்து
குடியேற்றுவது தொடர்பில் பேசப்பட்டது.
இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை
வெளியிட்டிருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்கிளாயில் குடியேறியுள்ள குறித்த பெரும்பான்மையின மீனவர்கள் பருவகால
மீன்பிடியில் ஈடுபடுவதற்காகவே ஆரம்பத்தில் கொக்கிளாயை நோக்கி வருகை தந்தனர்.
அங்கு தங்கியிருந்து பருவகால மீன்பிடியில் ஈடுபட்டு பின்னர் பருவகாலம்
முடிவுற்றதும் தமது சொந்த இடங்களுக்கே திரும்பிச் செல்வார்கள்.
அந்தவகையில் கொக்கிளாயில் குடியேறி தங்கியுள்ள சிங்களவர்கள் என
குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானியும் என்னிடம் உள்ளது.
இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள்
இந்நிலையில் கடந்த 1984ஆம் ஆண்டு கொக்கிளாய் முகத்துவாரத்திலிருந்த
தமிழ் மக்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிற்பாடு, எமது
தமிழ் மக்களின் பூர்வீக வாழிடங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையின மீனவர்கள்
குடியேறினர்.
எமது தமிழ்மக்களுக்குரிய 20ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்வீக தனியார் காணிகள்
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்கள்
குடியேற்றப்பட்டுள்ளனர். அந்த காணிகளுக்குரிய தமிழ் மக்களின்
பெயர்ப்பட்டியலும் எம்மிடமுள்ளது.
இவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைந்துள்ள எமது தமிழ் மக்களின் பூர்வீக
காணிகளை ஆக்கிரமித்து குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு நீர்கொழும்பு,
சிலாபம் உள்ளிட்ட அவர்களுடைய சொந்த இடங்களிலும் காணிகள், வீடுகள்
காணப்படுகின்றன.
ஒருவருக்கு ஒரு இடத்தில் காணியிருக்கலாம் என்பதே அரச கொள்கையாகும். இவ்வாறு
சிலாபம், நீர்கொழும்புப் பகுதிகளில் இந்த பொரும்பான்மை இனத்தவர்களுக்கு காணி
இருக்கத்தக்கதாக இங்கும், காணிகளை வழங்கமுடியுமா? என்பதற்கு உரியவர்கள்
பதிலளிக்க வேண்டும்.
இந்த விடயத்தில் நியாயமான முறையில் நடந்துகொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறாக எமது தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து கொக்கிளாய் முகத்துவாரத்தில்
தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப்பாதிப்பிற்கு
உள்ளாகின்றனர் என தெரிவித்து அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை
வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை மிக கடுமையாக எதிர்க்கின்றேன்.
அரசாங்கங்கள் அடாவடியாக காணி ஆக்கிரமிப்பு
அத்தோடு புலிபாஞ்சகல்லில் சுற்றுலாத்தளத்திற்கென ஒதுக்கப்பட்ட காணிகளையும்
ஆக்கிரமித்து அங்கு அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு
பெரும்பான்மை இனத்தவர்கள் எடுக்கின்ற முயற்சியினையும் வன்மையாகக்
கண்டிக்கின்றேன்.
கடந்தகாலத்தில் தமிழர்களின் பூர்வீக மணலாற்று பகுதிக் காணிகளை முன்னைய
அரசாங்கங்கள் அடாவடியாக ஆக்கிரமிப்புச்செய்து பெரும்பான்மை இனத்தவய்களுக்கு
பகிர்ந்தளித்திருந்தனர்.
இந்நிலையில் முன்னைய அரசாங்கங்களைப்போன்று இந்த அரசாங்கமும் அடாவடியாகச்
செயற்படாதீர்கள் எனக் கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.
ஊழலை்ஒழிப்போமெனக் கூறிக்கொண்டு ஆட்சிக்குவந்த இந்த அரசின் ஆட்சியில் ஊழல்கள்
இடம்பெறக்கூடாது.
கொக்குத்தொடுவாயில் இவ்வாறு எமது தமிழ் மக்களுக்குரியாபூர்வீக காணிகளை
அபகரித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளமுடியாது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிராட்டிகுளம், பண்டாரவன்னி, மன்னாகண்டல்
உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்கி, மாற்று வாழ்விடங்களை
அமைத்துக்கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
