Home இலங்கை அரசியல் சுதந்திரக்கட்சியின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது : லசந்த அழகியவண்ண சவால்

சுதந்திரக்கட்சியின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது : லசந்த அழகியவண்ண சவால்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் படி 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும் எனவும் சுமார் 100 சபைகளில் எமது ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றங்களில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் சபைகளை நிறுவுதல், கூட்டணியமைத்தல் குறித்து அரசியல் குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல்

கட்சியின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கமையவே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். வேட்புமனு தாக்கலின் போது இடம்பெற்ற தவறுகளை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஏனைய கட்சிகள் சபைகளை அமைப்பதற்கு எமது ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். அத்தோடு சில உள்ளூராட்சி மன்றங்களில் ஏனையோரின் ஒத்துழைப்புடன் எமக்கு ஆட்சியமைக்கக் கூடிய நிலைமை கூட காணப்படுகிறது. இது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

சில தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக மக்களுக்கு வழங்கப்படக் கூடிய சேவைகள் தொடர்பிலேயே விசேட அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

 ஜனாதிபதியின் அச்சுறுத்தல்

சுமார் 100 உள்ளூராட்சி மன்றங்களில் எமது ஆதரவின்றி எவராலும் சபைகளை நிறுவ முடியாது. எனினும் நாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் ஆளுந்தரப்பினர் சில பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர். தமக்கு வாக்களிக்காவிட்டால் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அச்சுறுத்தினார்.

அவரைப் பின்பற்றியே ஏனையோரும் இது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

எனினும் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் எம்மால் 40 சபைகளில் ஆட்சியமைக்க முடியும்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version