இலங்கையில் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை காலமும் இலங்கைக்கு பிரதானமாக சமையல் எரிவாயுவை விநியோகம் செய்த ஓமன் நிறுவனத்திடம் இருந்து வேறு ஒரு நிறுவனத்திற்கு எரிபொருள் விநியோகம் செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜியோ கேஸ் என்ற நிறுவனத்திற்கு எரிவாயு விநியோகம் செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையினால் ஜியோ கேஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஓமான் நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்பட்டபோது கடலில் வைத்து இலங்கை தர நிர்ணய சபை குறித்த எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய நிறுவனம் அவ்வாறு தர நிர்ணயங்களுக்கு இணங்க வில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளாக எவ்வித பிரச்சினையும் இன்றி இலங்கைக்கு எரிவாயு விநியோகம் செய்த ஓமான் நிறுவனத்தை நிறுத்திவிட்டு புதிதாக சுவிஸ் நிறுவனத்திற்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு நான்கு நாட்களுக்கு ஒரு தடவை ஒரு கப்பல் எரிவாயு தேவைப்பாடு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகளுக்கு இணங்காத இந்த நிறுவனத்திற்கு எரிவாயு விநியோகம் செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் மூன்று மாதங்களில் லிட்ரோ எரிவாயவிற்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கமும் சமையல் எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினையால் கவிழ்ந்தது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .
அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டால் எதிர்வரும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதம் அளவில் நாட்டில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
