அமெரிக்காவின் (US) பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆகியோருக்கு இடையில் முதன் முதலாக நேரடி விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.
பென்சில்வேனியா (Pennsylvania) – பிலடெல்பியாவில் (Philadelphia) நடக்கும் இந்த விவாத நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த விவாத நிகழ்ச்சியை ஏ.பி.சி ஊடகம் ஏற்பாடு செய்துள்ளதுடன், தொகுப்பாளர்களான டேவிட் முயர், லின்சி டேவிஸ் ஆகியோர் தொகுத்து வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலைப்புகளும் கேள்விகளும்
விவாத நிகழ்ச்சியானது, 90 நிமிடங்கள் நடைபெறவுள்ளதுடன் இடை நடுவே இரண்டு இடைவேளைகள் விடப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
அதன் போது, ஒருவர் பேசும் போது மற்றையவரின் மைக்ரோபோன் அணைக்கப்படும் என்றும், எந்தவொரு தலைப்புகளும் கேள்விகளும் வேட்பாளர்களுடன் முன்கூட்டியே பகிரப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
இதேவேளை, கடந்த ஜூன் 27 ஆம் திகதி ஜோ பைடனுக்கும் ட்ரம்ப் இற்கும் இடையில் விவதமொன்று இடம்பெற்ற நிலையில், அதில் பைடனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக தனது கட்சியிலேயே பைடனுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து தனது உடல் நிலை காரணமாக தேர்தலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.