கொழும்பில்(colombo) உள்ள அமைச்சர் பங்களாக்களை தங்கள் வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த பத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோரியுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் பங்களாக்களை கோரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் எண்ணிக்கை அறுபதாக அதிகரித்துள்ளது.
அமைச்சர்களுக்கான பங்களாக்களை ஒதுக்குவதில் எவ்வாறு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்த அறிக்கை அவசரமாக தயாரிக்கப்பட்டு வருவதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன(Chandana Abeyratne) தெரிவித்தார்.
சுமார் ஐம்பது அமைச்சர் பங்களாக்கள்
விரைவில் இந்த அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சுமார் ஐம்பது அமைச்சர் பங்களாக்கள் இருப்பதாகவும், அவற்றில் பல பயன்படுத்தப்படுவதற்கு முன்பு புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த அமைச்சர் பங்களாக்களை தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்ற கொள்கை முடிவை அரசாங்கம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
