உள்ளுராட்சிமன்ற தேர்தல் திகதியை அடுத்த மாதமளவில் அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) உறுப்பினர் சட்டத்தரணி அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் ஏலவே கோரப்பட்டு கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
எனினும் குறித்த காலத்தில் தேர்தலை நடத்துவதற்கான நிதி திறைசேரியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
இதனால் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டது.
அத்துடன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து நாம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது 30 தொடக்கம் 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலம் தேர்தலை நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு தேவையென்று குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது, ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மாதமளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) உறுப்பினர் சட்டத்தரணி அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.