Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் 6 மாதங்களாக காணாமல்போயிருந்த பெண் சடலமாக தோண்டியெடுப்பு

நுவரெலியாவில் 6 மாதங்களாக காணாமல்போயிருந்த பெண் சடலமாக தோண்டியெடுப்பு

0

நுவரெலியா (Nuwara Eliya) – ஹங்குராங்கெத்த பகுதியில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பெண் 6 மாதங்களாக காணாமல்போயிருந்த நிலையிலேயே இன்றைய தினம் (21.08.2024) கோனப்பிட்டிய – சீனாக்கொலை தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

36 வயதான, மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே இவ்வாறு
கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.

இவர் அக்கரபத்தனை பகுதியில் அரச வைத்தியசாலையில் தாதியராக பணிபுரிந்து வந்து
நிலையில் இடமாற்றம் காரணமாக கோனப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். 

பொலிஸில் முறைப்பாடு 

இவ்வாறிருக்கையில், அவர் காணாமல்போயுள்ளதாக அவரது
கணவரால் ஆறு மாதங்களுக்கு முன்னர் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பிலான மேலதிக விசாரணை நுவரெலியா பிரிவு சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகரினால் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டி பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகத்திற்கிடமான
நபர் ஒருவரைக் கைது செய்ததுடன், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று புதைத்துள்ளமை
தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர், பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் பன்வில
பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து அவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் கைது 

இதன்படி இன்று வலப்பனை நீதவான் சியபத் விக்ரமசிங்க
முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில்
மந்தாரநுவர பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்ய உள்ளதாகவும்
அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதுடன் சந்தேகநபர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version