கொழும்பு (Colombo) தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.
கடந்த ஏழாம் திகதி கொழும்பு சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து (Lotus Tower) தவறான முடிவெடுத்து கீழே விழுந்து உயிரிழந்திருந்தார்.
அத்தோடு, உயிரிழந்த குறித்த மாணவியும் கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து அண்மையில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு மாணவர்களும் நண்பர்கள் என காவல்துறையினர் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
கல்வி அமைச்சு
உயிரிழந்த மூவரும் ஒரே பாடசாலையில் கல்விகற்றவர்கள் என தெரியவந்துள்ள நிலையில் இது தொடர்பாக கொழும்பு சர்வதேச பாடசாலையில் விளக்கம் கோரவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர (J.M Thilaka Jayasundara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையை மூன்று மேலதிக செயலாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர்.
உயிரிழந்த மாணவி
இலங்கையில் செயற்படும் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் மீது கல்வி அமைச்சிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை ஆனாலும் இந்த பிரச்சினை குறித்து அறிக்கை கோரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளை கல்வி அமைச்சின் ஊடாக கண்காணிக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த இரண்டு மாணவர்களின் இழப்பிற்கு பின் தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.